முன்னாள் தலைவர் கப்டன் என்.சோமசுந்தரம் காலமானார்

முன்னாள் தலைவர் கப்டன் என்.சோமசுந்தரம் காலமானார்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபரும், பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவரும், சைவ பரிபாலன சபை முன்னாள் தலைவருமான கப்டன் என்.சோமசுந்தரம் (வயது 83) 26.10.2015 திங்கட்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் காலமானார். இவரின் பூதவுடல் மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு  புதன்கிழமை(28.10.2015)  இறுதிக்கிரியைகள் நடைபெற்றது

(யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபரும், விளையாட்டுத் துறைப் பொறுப் பாசிரியரும், விடுதி அதிபரும், மாணவர் தேசிய படையணி மற்றும் பாண்ட் அணி ஆகியவற்றின் பொறுப்பாசிரியரும், ஆங்கில ஆசானும், கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவரும் மற்றும் யாழ்ப்பாணம் றோட்டறிக் கழகம், யாழ்ப்பாணம் மாவட்ட கிரிக்கெட் சங்கம், யாழ்ப்பாணம் உதைபந் தாட்ட மத்தியஸ்தர் சங்கம், சைவ பரிபாலன சபை, ஜொலிஸ்ரார் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றின் முன்னாள் தலைவரும், யாழ் மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டுத்துறை அமைப்புகளையும் கட்டி வளர்த்த விளையாட்டுத்துறை நிர்வாகியும் )
26.12.1933 
  • மலேசியா போட்டிக்சன் நகரில் சோமசுந்தரம் பிறந்தார்.
  • தந்தையார்:- கந்தையா நாகலிங்கம். போட்டிக்சன் நகரில் அரசாங்க வைத்தியசாலை ஊழியர்.
  • தாயார்:- சிவபாக்கியம்
  • இளைய சகோதரிகள்:- தனலக்ஷ்மி, இந்திரமலர், சந்திரமலர்.
  • ஆரம்பக் கல்வி:- மலேஷியா சிறம்பான் நகரில் உள்ள 5 ஆம் ஜோர்ஜ் மன்னர் கல்லூரியில். சிறுவயதிலேயே சிறந்த ஹொக்கி வீரராகத் திகழ்ந்தார்.
மார்ச் 1950
  • யாழ். இந்துக் கல்லூரியில் மாணவனாகப் பிரவேசம்.
  • சிறந்த மாணவனாக, மாணவர் முதல்வனாக, மெய்வன்மை வீரனாகத் திகழ்ந்தார்.
  • ஆங்கில மொழியில் விசேட தேர்ச்சி பெற்ற மாணவனாக விளங்கினார்.
  • காசிப்பிள்ளை இல்லத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி குறுந்தூர, நெடுந்தூர ஓட்டங்களில் சாதனைகள் புரிந்தார். இல்ல மெய்வன்மைத் தலைவராகவும், இல்லத் தலைவராகவும் செயற்பட்டு சகல வீரர்களையும் திறம்பட வழி நடத்தினார். யாழ். மாவட்டப் பாடசாலைகள் மெய்வன்மைப் போட்டிகளில் முதலிடங்கள் பலவற்றைப் பெற்றார். பாடசாலையின் சார்பில் அகில இலங்கைப் பாடசாலைகள் மெய்வன்மைப் போட்டிகளில் பங்குபற்றினார்.
  • கல்லூரி உடற்பயிற்சி அணிக்கு தலைமை தாங்கினார். இவர் காலத்தில் யாழ். இந்து உடற்பயிற்சி அணி மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை முதன்முதலாகப் பெற்றது.
  • கல்லூரி படைபயில் குழுவுக்குப் பொறுப்பான சார்ஜன்டாக சிறப்பு சேவை. சார்ஜன்ட் நிலையிலிருந்து “Warrant Officer – II and appointed Company Sergeant Major”  பதவிக்கு உயர்ந்தார்.
28.08.1960
  • யாழ். இந்துக் கல்லூரி அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படுவதற்கு சற்று முன்னர் யாழ்.  இந்துக் கல்லூரி ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
1960 முதல் 1964 வரை
  • அதிபர் வி.எம்.ஆசைப்பிள்ளை, சி.சபாரத்தினம் ஆகியோரின் கீழ் யாழ்.இந்துவில் ஆசிரிய சேவை.
  • கல்லூரி மெய்வன்மை அணி, உடற்பயிற்சி அணி ஆகியவற்றின் பயிற்சியாளர்.
  • கல்லூரி படைபயில் குழுவின் பொறுப்பாளர்.
  • கல்லூரியின் முன்னணி ஆங்கில ஆசிரியர்.
  • இலங்கை இராணுவத் தொண்டர் படையின் 2 ஆம் லெப்டினன்டனாக நியமனம்.
  • இக்கால கட்டத்தில் ஜொலிஸ்ரார்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஹொக்கி, மெய்வன்மை அணிகளுக்குத் தலைமை தாங்கினார். யாழ். மாவட்டத்தில் சிறந்த ஹொக்கி  வீரராகத் திகழ்ந்ததோடு, 1963, 1964 இல் யாழ். மாவட்ட ஹொக்கி அணிகளுக்குத் தலைமை தாங்கி, கண்டி, மாத்தளையில் நடைபெற்ற ஹொக்கி தேசிய போட்டிகளில் சிறப்பாக விளையாடினார்.
1965 ஜனவரி
  • 1966 டிசம்பர் வரை பலாலி ஆசிரிய கலாசாலையில் ஆங்கில (விசேட) பயிற்சி மாணவன். அங்கும் மெய்வன்மை நிகழ்ச்சிகள் மற்றும் புறநடவடிக்கைகளில் ஈடுபாடு.
1967 ஜனவரி
  • ஆங்கில விசேட பயிற்சிபெற்ற ஆசிரியராக பதுளை ஊவா கல்லூரியில் நியமனம்.
1967 மே
  • படைபயில் குழு நடவடிக்கைகளில் இவரின் திறமையைப் பயன்படுத்துவதற் காக பண்டாரவளை சென்.யோசப் கல்லூரி இவரை தன்னிடம் அழைத்துக் கொண்டது.
1968 ஜனவரி
  • சுழிபுரம் விக்டோறியாக் கல்லூரிக்கு இடமாற்றம்.
  • அதிபர் வி.தம்பு, எஸ்.சிவசுப்பிரமணியம் ஆகியோரின் கீழ் ஆசிரியராகப் பணி.
  • விக்டோறியாக் கல்லூரியின் படைபயில் குழுப் பொறுப்பாளராகவும் விளையாட்டுப் பொறுப்பாளராகவும் பணிபுரிந்தார். அவரது காலத்தில் யாழ்ப்பாணத்தில் சிறந்த படை பயில் குழுவாக விக்டோறியாக் கல்லூரி அணி  திகழ்ந்தது.
  • ஹொக்கி விளையாட்டை விக்டோறியாக் கல்லூரியிலும் அறிமுகப்படுத்தினார்.
  •  தமது துணைவியார் கனகாம்பிகையை சந்திக்கவும் அதன் மூலம் காதல் திருமணம்  நடக்கவும் களம் அமைத்தது விக்டோறியாக் கல்லூரி.
1971 நடுப்பகுதி
  • 1971 கிளர்ச்சிக் காலத்தில் இராணுவப் பணிக்கு அழைப்பு, ஆனையிறவு, இயக்கச்சி, அநுராதபுரம், தலாவப் பகுதிகளில் தீரத்துடன் இராணுவப் பணி.
1972 ஜூன்
  •  யாழ். இந்துக் கல்லூரியில் ஆசிரியராக நியமனம். ஓய்வு பெறும் வரை அதிபர்கள் திரு.என்.சபாரத்தினம், திரு.சி.சபாலிங்கம், திரு.பொ.ச.குமார சுவாமி, திரு.எஸ்.பொன்னம்பலம், திரு.க.சி.குகதாசன், திரு.அ.பஞ்சலிங்கம் ஆகியோரின் கீழ் பணி புரிந்தார்.
  • யாழ். இந்து படைபயில் குழுவின் பொறுப்பாசிரியர்.
1973 ஜனவரி
யாழ். இந்து விளையாட்டுப் பொறுப்பாசிரியராக நியமனம். 1990 ஓகஸ்ட் வரை அப் பதவியில் சேவை. இக்கால கட்டத்தில் யாழ். இந்து விளையாட்டுத்துறை பல்வேறு சிறப்புப் பெறுபேறுகளை எட்டியது. அவற்றில் சில:-
  • 1973இல் 5 கிலோமீற்றர் வீதியோட்;டப் போட்டி கல்லூரியில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • 16 வருட கால இடைவெளிக்குப் பின் 1976 இல் கல்லூரியின் முத லாம் பிரிவு உதைபந்தாட்ட அணி யாழ். மாவட்ட சாம்பியனானது. 1978 இலும் சாம்பியன். 1974, 1975, 1976 களில் இரண்டாம் பிரிவும், 1979 இல் மூன்றாம் பிரிவும் சாம்பியன். பல தடவைகள் யாழ். இந்து அணிகள் இரண்டாம் இடத்தைப் பெற்றன.
  • யாழ். மாவட்டத்திலிருந்து முதல் தடவையாக யாழ். இந்து வீரர்கள் இருவர் அகில இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட அணிகளில் 1976, 1977 களில் இடம்பெற்று வெளிநாடுகளில் சென்று விளையாடினர். ஒருவர் கோல்காப்பு வீரர். மற்றையவரான சண்.தயாளன் இலங்கைப் பாடசாலைகள் அணிகளுக்குத் தலைமை வகித்தார்.
  • யாழ். கிரிக்கெட் அணிகள் இவரது காலத்தில் பல தடவைகள் யாழ். மாவட்டத்தில் சிறந்த அணிகளாகத் தெரிவாகின. 1979, 1984, 1986 களில் 15 வயதுப் பிரிவு  அணிகளும் 1986, 1993 களில் 17 வயதுப் பிரிவு அணிகளும் சாம்பியாகின. 1975 இல் 16 வயதுப் பிரிவு அணி அகில இலங்கையில் இரண்டாமிடத்தைப் பெற்றது. 1975 இலும் அடுத்து வந்த ஆண்டுகளிலும் முதலாம் பிரிவு கிரிக்கெட் அணிகள் யாழ்ப்பாணத்தில் தோற்கடிக்கப்படாத அணிகளாகத் திகழ்ந்தன. 1983 இல் வடக்கில் சிறந்த அணியாகத் தெரிவு செய்ய்;ப்பட்டது.
  • 1973இல் பாடசாலையில் இவரால் ஹொக்கி அறிமுகப்படுத்தப்பட்டது. 1975 இல் 19 வயதுப் பிரிவு அணியும் 1977 இல் 17, 19 வயதுப் பிரிவு அணிகள் இரண்டும் யாழ். மாவட்ட சாம்பியாகின. இந்த ஹொக்கி அணிகளுக்குப் பயிற்சியாளரும் இவரே.
  • இவரது காலத்தில் 1973 முதல் 9 ஆண்டுகள் தொடர்ந்து யாழ். இந்து மெய்வன்மை அணிகள் யாழ். மாவட்டத்தில் சாம்பியனாக வந்தன. அகில இலங்கை ரீதியில் வெளிமாவட்டப் பாடசாலைகளுள் மைதான நிகழ்ச்சிகளுக்காக வழங்கப்படும் விசேட வெற்றிக் கிண்ணம் 1977, 1978 ஆகிய இரு ஆண்டுகளிலும் சுவீகரிக்கப்பட்;டது. அகில இலங்கைப் பாடசாலைகள் ரீதியில் இவரிடம் பயிற்சி பெற்ற மாணவனான ரீ.இரவீந்திரன் 45’4’’ பாய்ந்து முறியடிக்கமுடியாத சாதனை ஒன்றை நிலை நாட்டினார். எஸ்.தயாளன் ஈட்டி எறிதல்,  தடியூன்றிப் பாய்தல் ஆகிய நிகழ்ச்சிகளிலும், எஸ்.கரன்சிங் தடியூன்றிப் பாய்தலிலும் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தினர்.
  • 1974 இல் கல்லூரியில் கூடைப்பந்தாட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கல்லூரியின் 18 வயதுப் பிரிவு கூடைப்பந்தாட்ட அணி 1977 இல் அகில இலங்;கைப் பாடசாலைகள் சாம்பியனானது. 1976, 1977 ஆகிய இரு ஆண்டுகளிலும் யாழ். மாவட்ட சாம்பியனாக வந்தது.
  • 1984இல் மீண்டும் கல்லூரியில் கரப்பந்தாட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
  •  கல்லூரி மாணவர் முதலவர்களின்; பொறுப்பாசிரியராகவும், விடுதி அதிபராக வும் நீண்டகாலம் பணி புரிந்தார்.
  • 1981 இல் சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் பிரிவையும் பின்னர் செஞ்சிவைச் சங்கப் பிரிவையும் கல்லூரியில் ஆரம்பிக்கக் காரணமாக இருந்தார்.
1983 இல்
இலங்கை இராணுவத் தொண்டர் படையின் கப்டனாக நியமனம். 1976 இல் கொழும்பில் நடைபெற்ற அணி சேரா நாடுகள் மாநாட்டின் போதும் 1981 இல் நடைபெற்ற பொதுநல அமைப்பு கல்வி அமைச்சர்கள் மாநாட்டின் போதும் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டுத் தலைவர்கள் குழுக்களை கட்டுநாயக்காவில் வரவேற்கும் அதிகாரிகள் குழுக்களுக்கு பாதுகாப்புக்கான பொறுப்பாளராகச் செயலாற்றினார்.
1986 இல்
  • கல்லூரி பிரதி அதிபராக நியமனம். அன்று முதல் கல்லூரியின் சகல நிர்வாகவிடயங் களிலும், நிதி விவகாரங்களிலும், ஒழுக்கம், கட்டுப்பாட்டைப் பேணுதல், புற நடவடிக்கைகளை விருத்தி செய்தல் ஆகியவற்றிலும் சிறப்புப் பணி யாற்றினார்.
  • 1989இல் மேற்கத்திய பாண்ட் குழுவை கல்லூரியில் அமைத்து, கல்லூரியில் சிறந்த பாண்ட் அணியை உருவாக்கினார்.
  • கல்லூரி நூற்றாண்டு விழா நிகழ்வை முன்னின்று நடத்தினார்.
26.12.1993
அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு.
1960முதல் பல்வேறு பொது அமைப்புகளிலும், விளையாட்டுச் சங்கங்களிலும் பொறுப்பான பதவிகளை அலங்கரித்து பெரும் சேவையாற்றினார். அவற்றில் சில: –
  • யாழ்ப்பாண உதைபந்தாட்ட மத்தியஸ்தர் சங்கத்தின் தலைவராக, செயலாளராக பின் யாழ். மாவட்ட உதைபந்தாட்ட மத்தியஸ்தர் சங்கத்தின் செயலாளராக, தலைவராக.
  • யாழ். உதைபந்தாட்டச் சங்கம், யாழ். உதைபந்தாட்ட லீக் ஆசியவற்றின் உபதலைவராக.
  • யாழ். அமெச்சூர் மெய்வன்மை சங்கத்தினதும், யாழ். மாவட்ட அமெச்சூர் மெய்வன்மை சங்கத்தினதும் உபதலைவராக.
  • யாழ். மாவட்ட ஹொக்கிச் சங்கம், யாழ். பாடசாலைகள் ஹொக்கிச் சங்கம், ஹொக்கி மத்தியஸ்தர் சங்கம் ஆகியவற்றின் செயலாளராக.
  • யாழ்ப்பாணப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் செயலாளராக.
  • யாழ்ப்பாணப் பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராக.
  • யாழ்ப்பாணம் கிரிக்கெட் மத்தியஸ்தர் சங்கத்தில் ஸ்தாபக உறுப்பினராக.
  • நீண்ட காலம் ஜொலி ஸ்ரார்ஸ் விளையாட்டுக் கழகச் செயலாளராகவும், உப தலைவராகவும், பின்னர் தலைவராகவும்.
  • யாழ். மாவட்டக் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக.
  • சைவ பரிபாலன சபையின் தலைவர் மற்றும் உபதலைவராக.
  • யாழ். றோட்டறிக் கழகத்தின் தலைவராகவும் பிற பொறுப்பான பதவிகளிலும்.
  • யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் தலைவராக, மற்றும் மூன்று மாடி விடுதிக் கட்டடக் குழுவின் தலைவராக.
  • வட மாகாண ஆசிரிய சங்க சகாய நிதிச் சங்கத்தின் உபதலைவராக, வட மாகாண ஆசிரிய சங்கப் பரீட்சைக் குழு உறுப்பினராக.
  • ஸ்ரீலங்கா அமெச்சூர் மெய்வன்மை சம்மேளனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தொடக்குநராகவும், இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட உதைபந்தாட்ட மத்தியஸ்தராகவும், மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஹொக்கி நடுவராகவும் நீண்டகாலம் பணியாற்றினார்.